புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல்’ சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டமொன்றை அறிமுகத்துவதன் தேவை கருதி, இது தொடர்பான ஆரம்ப வரைவொன்றைத் தயாரிப்பதற்காகத் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவின் அடிப்படையில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்’ என்ற பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூல வரைவுக்குச் சட்டமா அதிபரின் ஆலோசனையும் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
எனவே, குறித்த சட்டமூல வரைவை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.











