டுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. மாற்ற முடியாது. சில சட்ட திட்டங்கள் மடு திருத்தலத்திற்கு உரித்துடையதாக இருக்கிறது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (11) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மடுவில் இடம் பெற்ற மடு பெருவிழாவிற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆயர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் பெருந் நிலப்பரப்பில் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் முறைகள் வழி பாடுகளுக்கான சட்ட திட்டங்களுக்கு ஒப்பாக மடு விழாவை சிறந்த முறையில் நடத்துவதற்கு அரசு உதவி எமக்கு தேவை. இதற்காகத்தான் நாம் இதை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பெருவிழா என்கின்றோம்.
அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மடு பாரம்பரியத்தை கடைப்பிடித்து அதற்கமைய இந்த மடு விழாவுக்கான ஆயத்தங்களை பல நூற்றாண்டு காலமாக ஒழுங்குபடுத்தி முன்னெடுத்து வருகிறோம்.
இதற்கு உங்கள் ஒத்துழைப்பு எமக்கு மிக மிக அவசியம்.
சுகாதாரம், மருத்துவம், சாரணர் சேவை, ஜோன் ஆம்புலன்ஸ், கழிவு அகற்றும் நடவடிக்கை,பாதுகாப்பு நடவடிக்கைகள்,குடிநீர் விநியோகம் மின்சாரம்,உணவு மற்றும் கடைகள், போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் போன்றவற்றில் உங்கள் உதவிகள் அவசியம் தேவையானது.
மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. மாற்ற முடியாது. சில சட்ட திட்டங்கள் மடு திருத்தலத்திற்கு உரித்துடையதாக இருக்கிறது.
இந்த சட்டத்திட்டங்களை நாங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறியத் தந்திருக்கிறோம். இந்த பாரம்பரியத்தை நாம் ஒரே மனப்பான்மையுடன் அவற்றை நாம் யாவரும் ஒருமித்து செயற்படுத்தும் போது நாம் வழிபாடுகளை சிறந்த முறையில் செயல்படுத்த முடியும். அதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இங்கு கழிவு அகற்றுதல் பாதுகாப்பு போன்றவைகள் அவசியமாகிறது. சில கடைகள் இந்த மடுத்திருத்தல பகுதிக்குள் வர முடியாது. ஜஸ்கிறீம் வியாபாரம் அன்று தொட்டு இங்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்கள் ஊது குழல் போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மடு எல்லைப் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறனவைகளால் இங்கு வழிபாட்டுக்கு தடைகளாக காணப்படுகிறது. இவ்வாறு சில விடயங்களுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மடு வீதியில் கடைகள் அமைப்பதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அங்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இப்படியான விடயங்களுக்கு உதவிகள் உங்களிடமிருந்து அதிகமாக தேவையாக இருக்கிறது.இதற்கு எதிர்ப்புக்கள் விவாதங்கள் எம்மிடம் இருக்கக் கூடாது.
ஆகவே இங்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் போலீசார் பாதுகாப்பு படைகள் இருக்கின்றீர்கள். எங்களுக்கு தேவையானது இங்கு வருகை தரும் பக்தர்கள் ஒன்று சேர்த்து 15ந் திகதி பெருவிழாவை பக்தியாக நிறைவேற்றி மக்கள் தங்கள் உள்ளத்திலுள்ள வேண்டுதலை நல்ல மனதுடன் அன்னையிடம் சமர்பித்து திருப்தியான முறையில் அவர்கள் திரும்பிச் செல்லும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வருடத்திற்கு வருடம் புதிய புதிய பிரச்சினைகள் முன்னெடுக்கப் படுவதை நாம் நோக்கக் கூடியதாக இருக்கின்றது. முன்னைய காலத்தில் மடு வீதி பண்டிவிரிச்சான்- தம்பனை இவைகளும் மடுத்திருத்தலத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இங்கு மக்களை நாங்கள் குடியேற்றினோம்.
இப் பகுதிக்குள் மதுபானம், இறைச்சி கொண்டு வர முடியாது. இப் பகுதிக்குள் தொற்று நோய்கள் உருவாகக் கூடாது என்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இவைகள் இங்கு மட்டுமல்ல மடு எல்லைக்கப்பால் இவைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.மடுத்திருப்பதிக்கு மக்கள் வருகை தரும் போது இறை உணர்வு இருக்க வேண்டும்.
அதை விடுத்து சந்தைக்கு செல்லும் உணர்வாக இருக்கக் கூடாது. மடு ஆலய வீதியில் சிறுவர்களை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடு படுபவர்களும் உண்டு இவற்றை தடுக்க உங்களால் முடியும். அதற்கேற்ற சட்டமும் உண்டு.
ஆகவே நாளுக்கு நாள் மாறி வருகின்ற விடயங்களால் நாம் மடுவை மாற்றிக்கொள்ள முடியாது.என அவர் மேலும் தெரிவித்தார்.











