96 திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த இளம் நடிகை கௌரி கிஷன், தற்போது முற்றிலும் அழுத்தமான பெண் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு “தாரகை” எனப் பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்பீடு ரீல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்தின் போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அதிக வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், தீவிரமான மற்றும் எமோஷனல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனையுடன் கௌரி கிஷன் காட்சியளிக்கிறார்.
அவரைச் சுற்றி பல்வேறு வயது மற்றும் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் பல திசைகளில் பயணிப்பது போல் இந்த போஸ்டர் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்க்கை தேடல், தனிப்பட்ட தேர்வுகள், உறவுகள் மற்றும் அவர்களின் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்வதை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.
இத்திரைப்படத்தை கிரிஷ் இயக்க, அவருடன் இணைந்து துஹிரன் கதையை உருவாக்கியுள்ளார்.
நாகராஜ் வசனங்களை எழுத, பிரபல இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவையும், ஆலன் பி ஜான் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
தனித்துவமான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடித்துள்ள கௌரி கிஷன், இந்த ஆழமான எமோஷனல் கதையின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.











