மியன்மாரில் பௌத்தர்களின் புனித காலத்தைக் குறிக்கும் வகையில் விகாரையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் பங்கேற்றிருந்த வேளையில், அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மியான்மரின் மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ கிராமத்தில் இயங்கி வரும் பௌத்த மடாலயத்தைக் குறிவைத்து, ராணுவப் போர் விமானம் ஒன்று சுமார் 15 நிமிட இடைவெளியில் இரு சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளர்ச்சியாளர்களைக் குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு, பொதுமக்கள் கூடும் மத வழிபாட்டுத் தலங்களை ராணுவம் வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாக்கி வருவதாக ஜனநாயக ஆதரவு அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல், மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
வான்வழித் தாக்குதல்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைக்கும் பயங்கரவாத உத்திகளை ராணுவம் கையாண்டு வருவதால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1,00,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.











