மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை யை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக் கூறலை கோரும் வகையில் அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற உள்ள ‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக கலந்துரையாடும் வகையில் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் கருப்பொருளில் தமிழ் தாய் மார்களினால் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த மாநாடு தொடர்பாக மறைமாவட்ட ஆயருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது .
இதன் போது குறித்த மாநாட்டிற்கு தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்தார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வநாயகம் அரங்கில் இடம் பெற உள்ள குறித்த மாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.











