இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’.
இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540வது திரைப்படமாக அமைந்துள்ள இப்படத்திற்குத் தயாரிப்பாளர்களாக கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜோதி தேஷ்பாண்டேவின் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பதிப்பைப் பார்த்த இளையராஜா “அழகான படம்” எனப் பாராட்டியதுடன், படம் திரைக்கு வரும் முன்பே இதன் பின்னணி இசையைத் தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என்று விரும்பினார்.
அதன்படி, தற்போது 18 பின்னணி இசைத் துணுக்குகள் அடங்கிய பிரத்யேக ஆல்பத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆல்பம் டிஜிட்டல் தளங்கள் தவிர்த்து இசைப்பிரியர்களுக்காக வரம்பிற்குட்பட்ட வினைல் (Vinyl) ரெக்கார்டு வடிவிலும் வெளியாகிறது.
மேலும் இளையராஜாவின் புகழ்பெற்ற ‘How to name it’ ஆல்பத்தில் இடம்பெற்ற ‘Do anything’ என்ற இசைக்கோர்ப்பு நவீனப்படுத்தப்பட்டு இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான ‘கல்யாண விருந்து’ மற்றும் இளையராஜாவால் எழுதப்பட்டு பாடகி சுவேதா மோகனுடன் சேர்ந்து பாடிய ‘முத்துமணி’ என்ற ராஜா ட்ரான்ஸ் ரகக் காதல் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) முதன்முறையாகத் திரையிடப்படவுள்ள ‘டோரதி’ திரைப்படம், வரும் செப்டம்பர் 25 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.











