சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளில் ரோபோக்கள் குதித்தல், குத்துச்சண்டை மற்றும் அதிவேக ஓட்டம் போன்ற திறன்களை வெளிப்படுத்தின.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆய்வகங்களில் உருவாக்கப்படும் அதிநவீன ரோபோ தொழில்நுட்பங்களை விரைவாக ராணுவப் பயிற்சி தளங்களுக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) அதிகாரப்பூர்வ செய்தித்தாள் வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் பாதுகாப்புத் துறை, மனித உருவ ரோபோக்களை போர்க்களத் தேவைகளுக்கு ஏற்ப பரிசோதித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவக் கொள்முதல் அறிவிப்புகள், பாதுகாப்பு ஆவணங்கள் மற்றும் காப்புரிமைப் பதிவுகளின்படி, சீன ராணுவம் மனித உருவ ரோபோக்களின் பயன்பாட்டைத் துரிதப்படுத்தி வருகிறது.
இந்த ரோபோக்கள் மனித வீரர்களுடன் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும் என்பது குறித்தும், அவற்றுக்குத் தேவையான பயிற்சித் தரவுகள் மற்றும் புலனுணர்வுத் திறன்களை மேம்படுத்துவது குறித்தும் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகளாவிய அளவில் மனித உருவ ரோபோக்கள் உற்பத்தியில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.
BofA குளோபல் ரிசர்ச் அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மனித உருவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதம் சீன நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
வணிக ரீதியிலான இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி, சீன ராணுவத்திற்குத் தேவையான ரோபோடிக்ஸ் நுட்பங்களை எளிதாகவும் விரைவாகவும் பெற்றுத் தன் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தப் பெருமளவில் உதவுகிறது.











