வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் சிறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த அதிகாரி சிக்கியுள்ளார்.
சோதனையின்போது குறித்த அதிகாரியின் காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 16.7 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றி வரும் சிறை அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த போதைப்பொருள் யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது, இதன் பின்னணியில் வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளனரா என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் நுழைவாயில்களில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.











