இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, இலங்கைக்கான சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும், வரிச்சுமையை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சோசலிசக் கட்சியின் தலைவர் ந. தேவகிருஸ்ணன், இலங்கையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதன் மூலம் மாகாணங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், பிராந்திய பொருளாதாரங்களையும் உள்ளூர் உற்பத்திகளையும் மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பின்மையை ஒழித்தல், மக்களின் காணி உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல் மற்றும் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண்பதுடன், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











