இளம் வயதிலேயே முடி வேகமாக நரைக்கத் தொடங்கினால், அதற்கான காரணத்தை கண்டறிவது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆசிய மக்களிடையே பொதுவாக 25 வயதுக்கு முன்பே முடி நரைத்தால், அது ‘முன்கூட்டிய முடி நரைத்தல்’ எனக் கருதப்படுகின்றது.
முடி நரைக்க வயது மட்டுமே காரணமாக இருப்பதில்லை. மரபியல், வாழ்க்கை முறை, நீண்டகால மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, புகைப்பிடித்தல் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
குடும்பத்தில் பெற்றோர் அல்லது பிற உறவினர்களுக்கு இளம் வயதிலேயே முடி நரைத்திருந்தால், மரபணு காரணமாக அடுத்த தலைமுறையினருக்கும் இளநரை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். முடியின் நிறத்துக்கு காரணமான மெலனின் உற்பத்தியை மரபணு காரணிகள் பாதிக்கக்கூடும்.
அதேவேளை, நாள்பட்ட மன அழுத்தமும் முடியின் நிறத்தைப் பாதிக்கக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மன அழுத்தமே அனைவருக்கும் இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் எனக் கூற முடியாது.
விற்றமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளும் இளநரையுடன் தொடர்புடையதாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பழங்கள், கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, பால் மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம்.
சில சந்தர்ப்பங்களில் தைராய்டு பிரச்சினைகள், தன்னுடல் தாக்கு நோய்கள் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளும் இளம் வயதில் முடி நரைவதுடன் தொடர்புடையதாக இருக்கலாம். குறிப்பாக, முடியின் நிறம் திடீரென மாறுவதுடன் வேறு உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்பட்டால், தோல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
மேலும், சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகளை நம்பி, மருத்துவரின் ஆலோசனையின்றி பல்வேறு ஷாம்பு, ஹேர் சீரம் அல்லது பிற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
சில நரை முடிகள் இளம் வயதில் தோன்றுவது கட்டாயமாக நோயின் அறிகுறி அல்ல. மரபியல் காரணங்களாலும் முடி முன்கூட்டியே நரைக்கலாம். எனினும், முடி வேகமாக நரைத்தால் காரணத்தை கண்டறிந்து தேவையான சிகிச்சையைப் பெற மருத்துவரை அணுகுவது நல்லது.
சமச்சீரான உணவு, போதுமான உறக்கம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை ஒட்டுமொத்த உடல் மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு உதவும்.











