மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, சாந்திபுரம் கிராமத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் ஐந்து வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீதும் விழுந்துள்ளன. மேலும், வீடுகளில் காணப்பட்ட மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடும் வகையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுவதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், இடி மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.











