சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிர்வாகக் குழுவைச் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதித்த உத்தரவை எதிர்த்தும், அதற்கு ஆதரவாகவும் பொது தீட்சிதர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இவ்வழக்குகளின் இறுதித் தீர்ப்பின்போது, கடந்த 2014ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் நிருவாகப் பணிகள் உரிய முறையில் நடைபெறவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, கோயில் நிர்வாகப் பணிகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன் தலைமையில் இந்த புதிய குழுவை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயிலுக்குள் தீட்சிதர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் கட்டுமானப் பணிகளால் புராதனக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
எனவே, பழமையான கட்டிடங்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்களை அகற்றுவது குறித்து, தமிழ்நாடு புராதனச் சின்னங்கள் ஆணையத்துடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கவும், மாயமான மதிப்புமிக்க பொருள்களைக் கண்டறிந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கோயில் சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை வருமானங்களைத் தடையின்றி வசூலிப்பதுடன், வரவு-செலவு கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், கோயில் வருவாயை மேம்படுத்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.











