இந்தியாவின் பிராந்திய திசைகாட்டி செயற்கைக்கோள் முறைமைத் திட்டத்தின் கீழ், புதிய தலைமுறை வழிசெலுத்தல் செயற்கைக்கோளான ‘என்.வி.எஸ்-03’ (NVS-03) எதிர்வரும் 31 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சுமார் 2,250 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி-எப்18 (GSLV-F18) ராக்கெட் மூலம் புவி நிலைமாற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இந்தியப் பிராந்திய திசைகாட்டி வழிசெலுத்தல் முறைமைக்கான (IRNSS) சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட என்.வி.எஸ் வரிசையின் மூன்றாவது செயற்கைக்கோள் இதுவாகும்.
இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக்கடிகாரம் (indigenous atomic clock) மற்றும் பிற அணுக்கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன் கூடிய செயற்கைக்கோள் திசைகாட்டி சமிக்ஞைகள் மூலம் இந்தியப் பெருநிலப்பரப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 1,500 கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிக்கு விரிவான சேவைகள் வழங்கப்படவுள்ளன.











