இலங்கையிலிருந்து கடல் வழியாகச் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் உட்பட நான்கு பேர் இந்தியப் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே குந்துகால் கடற்கரையில் இன்று அதிகாலை கியூ பிரிவு மற்றும் மண்டபம் மரைன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த கனிஸ்டன் என்ற இளைஞர் படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது பிடிபட்டுள்ளார்.
இலங்கையில் தனக்கு வழக்கு நிலுவையில் இருப்பதால் விமானம் மூலம் இந்தியா செல்ல முடியாத நிலையில், கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதற்காக 40 ஆயிரம் ரூபாய் படகுக் கூலி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது சகோதரர் துஷ்யந்தன் உள்ளிட்ட மேலும் மூவரையும் பொலிஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்லும் கடல் வழிப் பயணத்தில் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்தும் இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.











