தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காகத் தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களைப் போற்றி வணங்குகின்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காகத் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உருவாக்கப்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழு மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் இணைந்து மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.
வழமை போன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெறும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காகப் பணிக்குழு தங்களைத் தயார்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதானப் பணிகள், ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.











