மன்னார் – முள்ளிக்குளம் பகுதிகளை இணைக்கும் வகையில் 26 கிலோ மீற்றர் நீளமான, 220 கிலோவோல்ட் திறனுடைய இரட்டைச் சுற்று மின் பரிமாற்ற பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள 100 மெகாவாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அத்துடன், தேசிய மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மின் பரிமாற்ற பாதையானது மன்னாரில் அமைந்துள்ள 220/33 கிலோ வோல்ட் மின் உப நிலையத்திலிருந்து, முள்ளிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள 220 கிலோ வோல்ட் மின் அளவீட்டு உபநிலையம் வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்காகச் சுமார் 250 கோடி ரூபாய் (2.5 பில்லியன் ரூபாய்) முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான முழுமையான நிதியுதவியையும் இலங்கை அரசாங்கமே வழங்கவுள்ளது.
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தியை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கும் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டமாக இது அமையவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், முசலி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர், பிரதியமைச்சரின் செயலாளர்கள், பிரஜாசக்தி தலைவர்கள், கிராம மக்கள் மற்றும் துறைசார் பொறியியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











