நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
பெரியார் நூலக சர்ச்சை தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஸ்காட்லாந்து போலீசாரால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் போலியாகப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விஜய் பாலு, விஜய் ஆதித்தன் போன்ற பெயர்களை எழுத்தாளர்களாகக் காட்டி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கன்னிமாரா நூலகத்தில் மட்டும் அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 523 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பதிப்பகம் எங்கு இருக்கிறது என்பதே பபாசி அமைப்புக்குத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்களைத் திரித்துப் போலியாக எழுத்தாளர்கள் போல் சித்தரித்துப் புத்தகக் கொள்முதல் மூலம் ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பவித்ரா கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதி போன்ற பெயர்களில் எழுத்தாளர்கள் யார் என்று கேள்வியெழுப்பிய அவர், தி.மு.க ஆட்சியிலேயே விஜய் பெயரிலும் போலிப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாகத் தி.மு.க ஆட்சியில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் போலிப் புத்தகங்களை உருவாக்கிச் கூட்டுச் சதி செய்து ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தி.மு.க தற்போது சிக்கிக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டினார்.
மேலும், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.











