பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தகங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்து மு.க.ஸ்டாலின் உலக சாதனை படைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
டிஜிட்டல் மற்றும் AI ஊழல் எனக் காலத்திற்குத் தகுந்தவாறு ஊழல் செய்வதில் தி.மு.க தன்னை வளர்த்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த விலைக் கொண்ட சாதாரணப் புத்தகங்கள் பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டதாகவும், போலிப் பெயர்களைக் கொண்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சினை வெடித்தது முதல் மு.க.ஸ்டாலின் பம்மிக் கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
பெரியார் அறிவுலகத்தைப் போல, கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழகத்தின் பிற நூலகங்களிலும் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதா என்பது குறித்து போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும், பெரியார் அறிவுலகக் கட்டுமானப் பணிகள் குறித்தும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகம் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி தி.மு.க சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











