அணுசக்திப் பொருள் உற்பத்தி மற்றும் ஆயுத ஆராய்ச்சி வசதிகளை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டுள்ளதுடன், பல்வேறு தளங்களிலும் வெவ்வேறு பணிகளுக்காகத் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் (Tactical nuclear weapons) பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. (KCNA) செய்தி வெளியிட்டுள்ளது.
அணுசக்திப் பொருள் உற்பத்தித் திறன் முறையாக விரிவுபடுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கிம் ஜோங் உன், அணு ஆயுத நிராயுதபாணியாக்கக் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையிலும், அணு ஆயுத நாடு என்ற வட கொரியாவின் அந்தஸ்து “முற்றிலும் மீற முடியாதது” என அவர் அறிவித்துள்ளார்.
வட கொரியாவின் அணுசக்தித் திறன் தற்போது யதார்த்தமாக உள்ளதாகவும், வெளிப்புறக் கூற்றுகளாலோ அல்லது புறநிலை யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் அணு ஆயுத நிராயுதபாணியாக்கப் பேச்சுகளாலோ தமது நாட்டின் அந்தஸ்து மாறாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வட கொரியாவின் அணு ஆயுத அந்தஸ்தை மறுக்கும் எந்தவொரு முயற்சியும் “வெளிப்படையான போர் அறிவிப்பாகக்” கருதப்படும் எனத் தெரிவித்த கிம் ஜோங் உன், தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் முக்கிய உத்தரவாதத்தைத் தாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பார்வையிடப்பட்ட வசதிகள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களை கே.சி.என்.ஏ. வெளியிடவில்லை.










