யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு உட்பட கிராம மட்ட அலுவலகர்கள் 35 பேருக்கு சைகை மொழி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் சா.சுதர்சன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும், யாழ்ப்பாண பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமை உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம மட்ட அலுவலகர்கள் 35 பேருக்கு சைகை மொழி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மூன்றாம் மொழியாக சைகை மொழியை அரசாங்க அலுவலர்களுக்கு கற்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட அலுவலர்களுக்கு இதனை விரிவாக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரினார். அத்துடன் , மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்கல்வி நிலையத்தினை அமைக்கவேண்டும் எனவும் கோரினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட யாழ் . பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி சி.ரகுராம் கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சமூகத்தின் நாடித்துடிப்பை அறிந்த ஒருவர். ஒடுக்கப்படும் சமூகத்தின் குரலாக அவர்களின் கரிசனையின்பால் அக்கறை கொண்ட ஒருவராக அறியப்பட்டவர்.
அவர் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்வைக்கும் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித்தருவார் என நம்புகின்றேன் எனக் குறிப்பிட்டார்.