மொன்றியல் (Montreal) நகரின் லாசால் (LaSalle) பிராந்தியத்தில் Bouncy Castle எனப்படும் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு, மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
லாசால் (LaSalle) பிராந்தியத்தில் உள்ள பூங்கா ஒன்றில், பலத்த காற்றினால் Bouncy Castle எனப்படும் துள்ளும் விளையாட்டுத்திடல் காற்றில் தூக்கி வீசப்பட்டது.
அதன் போது, அதில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி அவா சியாம்பினி (Ava Ciampini) அந்த விபத்தில் படுகாயமடைந்தார்.
உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமி அவாவின் நினைவாக, விபத்து நடந்த உல்லெட் பூங்காவில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உயிரிழந்த சிறுமியின் நினைவாக மக்கள் உல்லெட் பூங்காவில் ஒன்று கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மலர்களையும் மென்பொம்மைகளையும் (Stuffed Animals) அஞ்சலிப் பொருட்களாக வைத்து தங்களின் ஆழ்ந்த இரங்கலை அவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்த அசம்பாவிதம் குறித்து மொன்றியல் பொலிஸாரும், மாகாண மரண விசாரணை அதிகாரி மார்ட்டின் லாசான்ஸும் (Martine Lachance) தனித்தனியாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











