மொன்றியல் (Montreal) நகரில் கடந்த மாதம் கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் அதிகாரி முகமது லமின் பென்ரெடோவானின் (Mohamed Lamine Benredouane) நினைவாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் வீதிகளில் அணிவகுத்து நின்று தங்களின் கண்ணீர் அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் செலுத்தியுள்ளனர்.
மொன்றியால் பொலிஸ் திணைக்களத்தின் 34 வயதுடைய அதிகாரி முகமது லமின் பென்ரெடோவானின் உத்தியோகபூர்வ பொது அஞ்சலி மற்றும் நினைவு ஊர்வல நிகழ்வுகள் மொன்றியால் நகரின் மையப்பகுதியில் உணர்ச்சிப்பூர்வமாக இடம்பெற்ற போதே, பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்.
ஹெலிஃபாக்ஸ் (Halifax) முதல் மேற்கு வான்கூவர் (West Vancouver) வரை கனடாவின் நாலாபுறங்களிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் வருகை தந்திருந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பழங்குடியின அமைதிப் படையினர் கறுப்புப் பட்டி அணிந்து இந்த மாபெரும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
சென்-உர்பைன் (Saint-Urbain) வீதியில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ரினே-லெவெஸ்க் (René-Lévesque) அவென்யூ வழியாக நகரின் பிரதான விளையாட்டு மற்றும் கலை அரங்கான ‘பெல் சென்டரை’ (Bell Centre) சென்றடைந்தது.
ஊர்வலத்தின் போது கனேடிய ஆயுதப் படையின் ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் பறந்து மரியாதை செலுத்தின.
கடந்த 24 ஆண்டுகளில் மொன்றியலில் கடமையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.











