அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய சுங்கவரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், கனடிய தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய வர்த்தக நடவடிக்கைள் மற்றும் நிதியுதவித் திட்டங்களை மத்திய அரசு இன்று அறிவிக்கவுள்ளது.
இந்தப் புதிய சுங்கவரிகள், நாட்டில் இலகுவாகப் பெறக்கூடிய மாற்றீடுகளைக் கொண்ட பல்வேறு சர்வதேசப் பொருட்கள் மீது சுமத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 28 பில்லியன் டாலர் பெறுமதியான கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத சுங்கவரியை அமெரிக்கா கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தியது.
இதற்கான கனடாவின் பதிலடிச் சுங்கவரிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் ஒரு கிளை நிறுவனமாகப் பார்க்காமல் (subsidiary), சரியான அணுகுமுறையுடனும் சுயமரியாதையுடனும் அணுக அமெரிக்கா முன்வரும்போது மட்டுமே கனடா மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பும் என, பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











