இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 119 ஓட்டங்களால் படுதோல்வியடைந்துள்ளது.
சௌதாம்ப்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி புரூக் அதிரடியாக துடுப்பெடுத்து 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை விளாசினார். ஜோஸ் பட்லர் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
இதையடுத்து 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.
முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணி 19 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து பந்துவீச்சில் சோனி பேக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இங்கிலாந்து 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கார்டிஃபில் நடைபெறவுள்ளது.











