கியூபெக் மாகாணத்தின் முன்னணி அரசியற்கட்சியான பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) உறுப்பினர்கள், தங்களை விமர்சித்த பெண் மனநல மருத்துவருக்கு எதிராக முன்வைத்த நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்த (Harassing) புகார்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளன என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty
International) தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கியூபெக்கைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் கலாநிதி மேரி-ஈவ் காட்டன் (Dr. Marie-Ève Cotton) சமூக வலைத்தளங்களில் பார்ட்டி கியூபெக்வா’ கட்சியை விமர்சித்து வெளியிட்ட பதிவுகளுக்கு எதிராக, அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளைக் கண்டித்தே, சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பார்ட்டி கியூபெக்வா’ கட்சியின் பொதுச் செயலாளர் ஜெனிஃபர் (Génifère) உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மருத்துவர் மேரி-ஈவ் காட்டனின் சமூக வலைத்தளப் பதிவுகள் மருத்துவ தொழில்முறை ஒழுக்கக் கோவைகளுக்கு எதிரானது எனக் கூறி, கியூபெக் மருத்துவர்கள் ஒழுங்காற்றுச் சபையிடம் நான்கு வெவ்வேறான புகார்களைப் பதிவு செய்திருந்தனர்.
எனினும், இந்தப் புகார்கள் அனைத்தையும் ஆய்வு செய்த கியூபெக் மருத்துவர்கள் ஒழுங்காற்றுச் சபை, மருத்துவர் காட்டன் மீது எவ்வித
ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனக் கூறி புகார்களை நிராகரித்தது.
ஒரு குடிமகனாக மற்றும் மருத்துவ நிபுணராகத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை அவருக்கு உண்டு என்றும் கியூபெக் மருத்துவர்கள் ஒழுங்காற்றுச் சபை சுட்டிக்காட்டியது.
இந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை,பார்ட்டி கியூபெக்வா’ கட்சியின் இந்தத் தொடர்
நடவடிக்கைகள் மாற்றுக் கருத்துக்களை நசுக்கும் நோக்கம் கொண்டவை என விமர்சித்துள்ளது.
ஓர் அரசியல் கட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனிநபர் ஒருவரின் தொழில்முறைப் பெருமதிப்பிற்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் தொடர் புகார்களை அளிப்பது வேண்டுமென்றே அச்சுறுத்தும் மற்றும் துன்புறுத்தும் (Harassing Effect) செயலாகும் என, சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் குடிமக்களின் ஜனநாயக ரீதியிலான விமர்சனப் பங்கேற்பை முடக்கும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகள், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு முரணானவை என, சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கியூபெக்கில் விரைவில் தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ள நிலையில், பார்ட்டி கியூபெக்வாகட்சிக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று இத்தகைய கடுமையான அறிக்கையை வெளியிட்டிருப்பது மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











