யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்துச் சென்றதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக இன்று (27) மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
தியாகதீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வாக, கடந்த 15ஆம் திகதி நினைவாலயப் பகுதியில் இந்தச் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (26) இறுதி நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிலையிலேயே, இன்று யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு பொலிஸ் வாகனங்களில் நினைவாலயத்திற்கு வருகை தந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அகற்றப்பட்ட சிலையை உடனடியாக மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியுமே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.











