இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியது தனக்குக் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ‘பேட்ட’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய திரைப்படங்களில் இருவரும் நடித்திருந்தபோதிலும், இணைந்து நடிப்பதற்கான காட்சிகள் அமையவில்லை. தற்போது ‘பாக்கெட் நாவல்’ படம் மூலம் முதன்முறையாக இருவரும் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விஜய் சேதுபதி குறித்து குறிப்பிட்டுள்ள மாளவிகா மோகனன், அவர் மிகவும் அன்பானவர் மற்றும் சக நடிகர்களுக்கு முழு ஆதரவை வழங்கும் சிறந்த கலைஞர் எனப் பாராட்டியுள்ளார்.
அவருடன் இணைந்து நடித்த இந்த பயணத்தை வேறு யாரோடும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகியதாகவும், இந்தத் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.











