உக்ரைன் முழுவதும் இரவு மற்றும் காலை வேளையில் நடத்தப்பட்ட கடுமையான வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது ஆறு எரிபொருள் இலக்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமிர் செலென்வஸ்கி தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அறிவித்த எரிபொருள் போர்நிறுத்தத்தில் மாஸ்கோவிற்கு எந்தவொரு பற்றும் இல்லை என்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக உயர் எரிபொருள் விலைகள் குறித்த அழுத்தங்களுக்கு மத்தியில், உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவருக்கொருவர் எரிபொருள் அமைப்புகளைத் தாக்கிக்கொள்ளக் கூடாது என டிரம்ப் அறிவித்திருந்தார்.
எரிபொருள் போர்நிறுத்தத்தை ஏற்க ரஷ்யா விரும்பவில்லை என்றும், உக்ரைன் மக்கள் மற்றும் சமூகங்கள் மீது பயங்கரவாத வான்வழித் தாக்குதல்களைத் தொடர உத்தேசித்துள்ளது பெருகிய முறையில் தெளிவாகி வருவதாக செலென்வஸ்கி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
போலந்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு காணொளி மூலம் கருத்துத் தெரிவித்த அவர், தாக்கப்பட்ட இலக்குகளில் ஒரு எரிவாயு நிலையம் மற்றும் பெட்ரோல் நிலையம் ஆகியவை அடங்கும் என்று தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்கும் ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த போர்நிறுத்த அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையில், உக்ரைன் மீது எந்தவொரு தாக்குதலையும் தாங்கள் நடத்தவில்லை என்றும், போர்நிறுத்தம் எதையும் நாங்கள் விரும்பவில்லை, நீண்டகால சமாதானத்தையே விரும்புவதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத் தாக்குதல்களில் கார்கிவ் நகரில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் காலை வேளையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததோடு, குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர். இவானோ-பிராங்க்வஸ்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் திங்கள்கிழமை அன்று 1,569 புதிய நபர்கள் மற்றும் வணிகங்களை தங்கள் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என ஜெர்மனியின் சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.











