பிரான்ஸிலுள்ள நூற்றுக்கணக்கான சுப்பர்மார்க்கெட்களின் குளிரூட்டிகள் (Refrigerators) மற்றும் பிரீஸர்களை (Freezers) இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் குளிரூட்டிகளின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயர்த்தப்பட்டதால், பெருமளவிலான உணவுகள் பாழாகியுள்ளதுடன் தீப்பரவல்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், போர்த்துக்கல், போலந்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சைபர் அச்சுறுத்தல் பகுப்பாய்வாளர் ஃபெலிக்ஸ் ஏம் தெரிவித்துள்ளார்.
கார்ஃபோர் (Carrefour) நிறுவனத்தின் 80 சுப்பர்மார்க்கெட்களும், மோனோப்ரிக்ஸ் (Monoprix) நிறுவனத்தின் 5 சதவீதமான கடைகளும் இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்டெர்மார்சே ( Intermarche ) நிறுவனத்தின் 150 கடைகளில் குளிரூட்டிகள் 6 மணிநேரம் வரை 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடாக்கப்பட்டுள்ளன.
சுகாதார அபாயங்களைத் தவிர்க்கப் பாதிக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
இத்தாக்குதலினால் நாடுமுழுவதும் ஒரே நாளில் பத்து மில்லியன் கணக்கிலான யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இன்டெர்மார்சே தலைமை நிர்வாகி தியரி கோடிலார்ட் தெரிவித்துள்ளார்.
டேனிஷ் நிறுவனமான டான்ஃபோஸ் (Danfoss) வழங்கிய மென்பொருளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடே இதற்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பழைய பதிப்பு மென்பொருட்களைப் பயன்படுத்திய சாதனங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நெதர்லாந்தின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான அஹோல்ட் டெல்ஹைஸ் (Ahold Delhaize) நிறுவனமும் தனது வலையமைப்பில் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து பல அமைப்புகளை முடக்கியுள்ளது.
இருப்பினும் பிரான்ஸ் சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகக் கருத வழியில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.











