இலங்கையின் தேசிய மட்டத்தில் சிறந்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் தேசிய குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்று, வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர் மொஹமட் றியாஸ் சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்திலிருந்து இந்த விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் ஆசிரியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
வவுனியா புதிய சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் மொஹமட் றியாஸ், வ/சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிரதி அதிபராகவும், இரண்டாம் மொழியான சிங்களப் பாட ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
இவருக்கான தேசிய குரு பிரதீபா பிரபா விருது வழங்கும் நிகழ்வு, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது, ஆசிரியர் மொஹமட் றியாஸ் தனது கற்பித்தல் பணிக்காக இந்த விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
இந்த விருதைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் பல கட்டத் தெரிவு முறைகளைக் கடந்து வந்துள்ளார். முதலில் வலய மற்றும் கோட்ட மட்டங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றதுடன், மாகாண மட்டத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று, தேசிய விருதுக்குத் தெரிவாகியுள்ளார்.
கற்பித்தல் துறையில் அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் பணியாற்றி வரும் ஆசிரியர் மொஹமட் றியாஸின் இந்தச் சாதனை, வவுனியா மாவட்டத்திற்கும் அவர் பணியாற்றும் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
குறிப்பாக, வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் ஆசிரியர் என்ற அங்கீகாரம், இந்தச் சாதனையின் சிறப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
ஆசிரியர் மொஹமட் றியாஸின் இந்தச் சாதனைக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.











