இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் நாள் காட்சிகளிலேயே ரசிகர்களின் உற்சாகம் திரையரங்குகளில் களைகட்டியுள்ளது.
படத்தில் நடித்த நடிகர்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து படத்தைக் கண்டு களித்தனர்.
படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றிக்காக அப்படக்குழுவினருக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் நெல்சன், “உங்கள் பாராட்டுக்கு நன்றி, கமல்ஹாசன் சார். உங்களைப் போன்ற ஒரு ஜாம்பவானிடமிருந்து இத்தகைய பாராட்டைப் பெறுவது எங்களுக்குப் பெரும் கௌரவம்” எனத் தெரிவித்துள்ளார்.











