இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் ஸ்டியோ தயாரிப்பில் கடந்த 2025ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியான படம் ‘பைசன் காளமாடன்’. இத்திரைப்படம் வெளியாகி தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
புகழ்பெற்ற இந்தியக் கபடி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான மணத்தி பி. கணேசனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி பயோபிக் பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டது.
1990களின் பின்னணியில், தென்தமிழக கிராமப்புறப் பகுதிகளில் நிலவிய சாதியப் பாகுபாடுகள், வன்முறைகள் மற்றும் குடும்பச் சூழல்களைக் கடந்து, ‘கிட்டான்’ என்ற இளைஞன் தனது கபடி கனவை நோக்கி எவ்வாறு பயணித்தான் என்பதை மாரி செல்வராஜ் உணர்வுப்பூர்வமாக இயக்கியிருந்தார்.
இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்ருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், உலகளவில் 67 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சமூக அரசியல் கருத்துகளுடன் கூடிய அழுத்தமான விளையாட்டுத் திரைப்படமாக இது விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.
தற்போது ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, சமூக வலைத்தளங்களில் படக்குழுவினரும் ரசிகர்களும் #1YearOfBison என்ற ஹாஷ்டேக்குடன் தங்களது வாழ்த்துகளையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.











