இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி சிஜேபி அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 10ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடுவதற்காக டெல்லி வந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
மறுநாள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், அமைதிக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சிஜேபி நிர்வாகிகளான அஷுடோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் தடைவிதிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் தேசியக்கொடியுடன் போராட்டம் நடத்தியபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இவர்களைக் கைது செய்ததற்குக் எதிர்ப்பு தெரிவித்துத் தேசியக்கொடி ஏந்திப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அபிஜீத் தீப்கே மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுத் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும், அமைதிக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என அறிவித்துச் செல்லலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மந்திர் மார்க் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.
மேலும், கைதாகி சிறையில் 24 மணி நேரம் கழித்த அனுபவம் குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவருடன் கைது செய்யப்பட்ட ஐசா (AISA) தலைவர் நேஹா போரா முன்னதாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











