நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், தவெக மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினருமான பூபாலன் (42) என்பவர், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழப்பிடாகை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலை 7 மணிமுதல் நடத்தப்பட்ட சோதனையின் போது, 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் உள்ளிட்ட இருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு, இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பூபாலனை கட்சியிலிருந்து நீக்கி தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டதன் காரணமாக பூபாலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் அவருக்கும் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் தொண்டர்கள் யாருக்கும் அவருடன் கட்சி ரீதியாகத் தொடர்பு இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.











