அமெரிக்காவில் உள்ள உக்ரைன் மற்றும் சூடான் அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து(TPS) தற்போதைக்கு நீடிக்கும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம்(DHS) அறிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு அந்தஸ்து முடிவடைய இருந்த நாளிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் சூடான் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து பெற்றவர்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் “பொருத்தமான நேரத்தில்” வெளியிடப்படும் என்றும், அதுவரை அவர்களின் குடியேற்றப் பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரழிவுகள், ஆயுதமேந்திய மோதல்கள் அல்லது பிற அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி சட்டப்பூர்வமாகப் பணியாற்ற இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து அனுமதிக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வரும் நிலையிலும், தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து திட்டத்தின் கீழ் சில குடியேற்றவாசிகளுக்குக் கிடைத்த இரண்டாவது தற்காலிக நிவாரணம் இதுவாகும்.
முன்னதாக செப்டம்பர் மாதத்தில், எல் சால்வடார் நாட்டவர்களுக்கான பாதுகாப்பைத் தொடர அவரது நிர்வாகம் அனுமதித்திருந்தது.
போர் காரணமாக உக்ரைனில் இருந்து தப்பி வந்த சுமார் 2,400,000 பேர் அமெரிக்காவில் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தைப் பதிவு செய்துள்ளனர்.
அதேவேளையில், இராணுவத்திற்கும் போட்டிப் படைக்கும் இடையிலான போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானைச் சேர்ந்த சுமார் 6,800 பேர் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
அதேவேளையில், ‘க்ளோபல் ரீஃப்யூஜ்’ (Global Refuge) என்ற தொண்டு நிறுவனம் இந்த தற்காலிக நிவாரணத்தை வரவேற்றுள்ள போதிலும், பயனாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முதலாளிகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வமான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.











