சவூதி அரேபியாவில் பங்களாதேஷைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தமக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படவில்லை எனப் பங்களாதேஷ் அரசு கவலை வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து சவூதி அதிகாரிகளிடம் விளக்கமளிக்குமாறும் கோரியுள்ளது.
மெக்காவிலுள்ள பள்ளிவாசலொன்றிற்குள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பங்களாதேஷைச் சேர்ந்த குறித்த இருவருக்கும் கடந்த 14ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் சவூதி அரேபிய உள்துறை அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரே தமக்கு இந்த விடயம் தெரியவந்ததாகப் பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் புரிந்ததாகக் கூறப்படும் குற்றம் மற்றும் தண்டனை வரை வழிவகுத்த சட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கத்தைச் சவூதி அரேபியாவிடம் கோரியுள்ளதாகப் பங்களாதேஷின் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஷாமா ஒபேத் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜெத்தாவிலுள்ள பங்களாதேஷ் துணைத்தூதரகத்திற்குச் சவூதி அரேபியா வழங்கிய சிறைக் கைதிகளின் பட்டியலில் இந்த இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்த போதிலும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக டாக்காவிலுள்ள சவூதி தூதுவரை கடந்த அக்டோபர் 18ஆம் திகதி நேரடியாக நேரில் அழைத்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு, சட்ட நடவடிக்கைகள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்துத் தூதரக அதிகாரிகளுக்கு ஏன் முன்னறிவித்தல் வழங்கப்படவில்லை என்பது குறித்துத் தனது கடுமையான கவலையையும் கேள்விகளையும் பதிவு செய்துள்ளது.
இஸ்லாமியச் சட்டத்தின் ‘தஃஸீர்’ பிரிவின் கீழ், நீதிபதிகளின் விருப்பத்திற்குரிய அதிகாரம் கொண்ட தண்டனை முறையின் கீழேயே இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தற்போது சவூதி அரேபியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பங்களாதேஷ் பிரஜைகள் வசித்து வருகின்ற நிலையில், இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவிடமிருந்து விரிவான பதில் கிடைக்கும் வரை காத்திருப்பதாகவும், அதன்பின்னரே சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.











