கியூபெக்கில் உலகின் ஒரே மூலோபாய மேப்பிள் சிரப் கையிருப்பு விரைவில் முற்றாகத் தீர்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 53 ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய அளவிலான இந்தக் கையிருப்பு, கியூபெக்கில் உள்ள மூன்று கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் உள்ள சுமார் 13,500 மேப்பிள் சிரப் உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கியூபெக் மேப்பிள் சிரப் உற்பத்தியாளர்கள் அமைப்பு (PPAQ), இந்தக் கையிருப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள் முற்றாகத் தீர்ந்துவிடக்கூடும் என எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கனடிய மேப்பிள் சிரப்புக்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த நிலைமைக்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, இந்தத் தொழிலின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.2 பில்லியன் டொலர் பெறுமதியுடைய இந்தத் தொழில்துறை, கையிருப்பை மீண்டும் நிரப்புவதிலும் அதிகரித்து வரும் சர்வதேசத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக PPAQ தலைவர் லூக் கூலே தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு காரணமாக, மூலோபாயக் கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, உலகச் சந்தையில் அதிகரித்து வரும் தேவையைச் சமாளிக்கும் வகையில் மேப்பிள் சிரப் உற்பத்தித் துறையின் உற்பத்தித் திறனையும் மேம்படுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்றான மேப்பிள் சிரப்பின் கையிருப்பு குறைந்து வருவது, சர்வதேசச் சந்தையில் அதன் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.











