கியூபெக் மாகாணத்தின் ஷாம்ப்ளைன் (Champlain) தொகுதிக்கான வாக்கு மறுஎண்ணிக்கை நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ள பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி, அங்கு கியூபெக் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் கியூபெக் தேசிய பேரவையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதுடன், இத்தொகுதியிலிருந்து அட்ரியானா சலோன்டாய் (Adriana Szalontai) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.
முன்னதாக, கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 191 வாக்குகள் வித்தியாசத்தில் சலோன்டாய் வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும், வாக்குப்பதிவு மைய அதிகாரிகளின் அறிக்கைகளில் முறைகேடுகள் மற்றும் நடைமுறைப் பிழைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, பார்ட்டி கியூபெக்வா கட்சி வேட்பாளர் ரெனாய் பிரான்ஷோ (René Branchaud) நீதிமன்ற மறுவாக்கு எண்ணிக்கைக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி எரிக் மார்டெல் (Éric Martel) உத்தரவின் பேரில் ட்ரோய்ஸ்-ரிவியேர்ஸ் (Trois-Rivières) நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மொத்தமுள்ள 191 வாக்குப்பெட்டிகளில், கட்சி முறைகேடுகள் குறித்து சந்தேகம் கொண்டிருந்த 67 வாக்குப்பெட்டிகள் மட்டுமே எண்ணப்பட்ட நிலையில், பார்ட்டி கியூபெக்வா கட்சி மறுவாக்கு எண்ணிக்கையை இடைநிறுத்த முடிவெடுத்தது. அத்துடன், மீதமுள்ள 124 வாக்குப்பெட்டிகளின் முடிவுகளையும் முன்னர் அறிவித்தபடியே ஏற்க அக்கட்சி சம்மதம் தெரிவித்தது.
இறுதியில், மேரிசி (Mauricie) பிராந்தியத்தைச் சேர்ந்த இத்தொகுதியில் சலோன்டாய் 186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக ‘எலெக்ஷன்ஸ் கியூபெக்’ (Élections Québec) தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.
இம்முடிவுகள் குறித்துக் கருத்து தெரிவித்த பார்ட்டி கியூபெக்வா கட்சி வேட்பாளர் ரெனாய் பிரான்ஷோ, ஜனநாயகத்தின் தீர்ப்பை ஏற்பதாகவும், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வஷோன் (Vachon) தொகுதியில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையில் பார்ட்டி கியூபெக்வா வேட்பாளர் ஸ்டீபன் போகெங் (Stephan Fogaing) 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, கியூபெக் சட்டமன்றத்தில் பார்ட்டி கியூபெக்வா கட்சியின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.











