கியூபெக் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரம்பக் கட்டத்தில் சில தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது என அக்கட்சியின் தலைவர் எரிக் டுஹைம் (Éric Duhaime) தெரிவித்துள்ளார்.
கியூபெக் சட்டமன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கட்சியின் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தைக் குறிப்பிட்டார்.
கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் கியூபெக் சட்டமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்கு எவ்வித ஆசனங்களும் இருக்கவில்லை.
இருப்பினும், இத்தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்த அக்கட்சி, சுமார் 21 சதவீத வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் கியூபெக் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக கியூபெக் கன்சர்வேடிவ் கட்சி உருவெடுத்துள்ளது.
1935 ஆம் ஆண்டிற்குப் பிறகு கியூபெக் மாகாண சட்டமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதிநிதிகள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தநிலையில், வெற்றிபெற்ற கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அரசியலுக்குப் புதியவர்கள் என்பதால், அவர்களில் சிலர் ஏற்கனவே குழப்பமான கருத்துக்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால், கட்சியின் கொறடா ரெனார்ட் லேப்ரெக் (Renaud Labrecque), உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் அதிகக் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
கியூபெக் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 127 ஆசனங்களில், சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ள ‘பார்ட்டி கியூபெக்கோய்ஸ்’ (Parti Québécois) கட்சி 60 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது.
இதனால் புதிய சட்டமன்றத்தின் தீர்மானங்களைத் தீர்மானிக்கும் முக்கிய பலத்தை கன்சர்வேடிவ் கட்சி தன்வசம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











