அங்கவீனமுற்ற நபர்களுக்கான சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பான நான்கு நாள் வதிவிடப் பயிற்சி நெறியை நிறைவு செய்த 35 பேருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தைச் சேர்ந்த மத்திய அரசாங்கத்தின் கீழ் பணியாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இந்தப் பயிற்சி நெறி நடத்தப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நான்கு நாட்களாக நடைபெற்ற பயிற்சி நெறியின் இறுதி நாளான இன்று, அதில் பங்கேற்ற 35 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் H. சத்தியஜீவிதா, பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இதன்போது, சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூகப் புனர்வாழ்வு இணைப்பாளர் சேர சிங்க உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
அங்கவீனமுற்ற நபர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதற்கான உத்தியோகத்தர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.











