யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகத் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 583 மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், மரபணுப் பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் இன்றி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தாங்கள் கருதும் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர்கள், புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்படும் மரபணு மாதிரிகள் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டு, உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை மூலம் நீதி கிடைக்கும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என்றும் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்











