கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளம் கண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புதிய திருத்தங்களின் கீழ், முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவோருக்கான அபராதம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பாலிதீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றைத் தரம் பிரித்தே குப்பைச் சேகரிப்புக்காக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 40 சுகாதாரத் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய கரைச்சி பிரதேச சபையில் தற்போது 11 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குப்பை அகற்றும் பணிகளில் சவால்களை ஏற்படுத்துவதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்களும் வணிகர்களும் தங்களது கழிவுகளை முறையாகச் சேமித்து, பிரதேச சபையின் குப்பை அகற்றும் வாகனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.











