சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால், இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டு, தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூறாய் கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களும், சீது விநாயகர் குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 குடும்பங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேரும் இலுப்பைக்கடவை பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த இரு கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், இரண்டு கிராமங்களிலும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு சம்பவமாக, சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.











