கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று பெரும் நலன்களையும் வேண்டி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரை வழிபடும் நவராத்திரி விரதத்தின் நிறைவு நாளான விஜயதசமி தினம், வவுனியா மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களிலும் விஜயதசமி விசேட பூஜை வழிபாடுகளும், சிறுவர்களுக்கான ஏடு தொடக்கும் நிகழ்வுகளும் பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளன.
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜயதசமி தினத்தில், குழந்தைகளின் கல்வியை ஆரம்பிப்பது மங்களகரமானதாக இந்து மரபில் கருதப்படுகிறது.
அந்த வகையில், இன்று காலை முதல் பிற்பகல் வரை வவுனியா மாவட்டத்தின் பிரதான ஆலயங்களுக்குத் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்த பெற்றோர், ஏடு தொடக்கும் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, வவுனியா தாண்டிக்குளம் அருள்மிகு ஐயனார் ஆலயம் மற்றும் குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் விசேட அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் ஆராதனைகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, குருமார்களின் வழிகாட்டுதலுடன் சிறுவர்களுக்கு நெல்லிலும் அரிசியிலும் எழுத்துக்களை எழுதப் பழக்கி, கல்வியை ஆரம்பித்து வைக்கும் ஏடு தொடக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு, முப்பெருந்தேவியரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.











