கியூபெக் மாகாணத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிவினை வாக்கெடுப்பு நடைபெற்று, 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் கியூபெக் சுதந்திரம் குறித்த உரையாடல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கியூபெக்கில் தற்போது Parti Québécois கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மாகாணத்தின் இறையாண்மை குறித்த கேள்வி, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில், கியூபெக் மாகாணம் கனடாவிலிருந்து தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கு எதிரான அணி வெறும் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விரைவில் மற்றொரு வாக்கெடுப்பு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றாலும், அது முற்றிலும் இயலாதது அல்ல என்று, மெக்கில் கனேடிய ஆய்வு நிறுவனத்தின் (McGill Institute for the Study of Canada) இயக்குநர் டேனியல் பெலண்ட் (Daniel Béland) தெரிவித்துள்ளார்.
கியூபெக் முதல்வர் பால் சின்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon), மற்றொரு வாக்கெடுப்பை நடத்துவதாக வாக்குறுதி அளித்தே தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தார்.
எனினும், அமெரிக்க அதிபர் மாளிகையில் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருக்கும் வரை, அந்த வாக்கெடுப்பு நடத்தப்படாது எனவும் பிளமொண்டன் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிய மெக்கில் கனேடிய ஆய்வு நிறுவனத்தின் (McGill Institute for the Study of Canada) இயக்குநர் டேனியல் பெலண்ட் (Daniel Béland), 1995ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலை மாறுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் அமெரிக்காவை ஒரு வலுவான மற்றும் நம்பகமான வர்த்தக கூட்டாளியாக கியூபெக் நம்பியிருந்ததாகவும், ஆனால் தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை எனவும் டேனியல் பெலண்ட், தெரிவித்தார்.











