கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த ஏழு மாதங்களுக்குள் புதிய கூட்டாண்மை ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார்.
மொன்றியலில் நடைபெற்ற கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையான உறுப்புரிமை இல்லாமலேயே, அதற்கு மிக நெருக்கமான கூட்டாண்மை அந்தஸ்தை கனடாவுக்கு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் Ursula von der Leyen-உம் கனடாவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமான உறவை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகளை 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு முன்னதாக நிறைவு செய்ய இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளதால் பேச்சுவார்த்தைகளில் சவால்கள் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, ‘Associate Membership’ எனப்படும் இணை உறுப்புரிமை என்ற அந்தஸ்து தொடர்பில் ஐரோப்பிய நாடுகளிடையே இன்னும் முழுமையான இணக்கம் ஏற்படவில்லை.
இந்தக் கூட்டாண்மை நடைமுறைக்கு வந்தால், இருதரப்புக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி தொடர்புகள் மேலும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய சந்தைக்கு கனடாவின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் புதிய கடலுக்கடித் தரவுப் பரிமாற்றக் கேபிள் அமைப்பது குறித்தும் இருதரப்பும் ஆராயவுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முக்கிய கட்டத்தை எட்டும் என கனேடிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.











