சட்டப்பூர்வ கட்டமைப்புகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தங்களது உறவு மற்றும் பயன்களைக் கனடா வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என, ஐரோப்பிய கொள்கை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ‘இணைப்பு உறுப்பினர்’ (associate member) அந்தஸ்தை கனடா பெறுவது குறிப்பான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய கொள்கை நிபுணர்களின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
மொன்றியலில் அண்மையில் நடைபெற்ற கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகி உரையாற்றிய கல்வியாளர்களும் நிபுணர்களுமே, இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்தாகும் பல ஒப்பந்தங்கள் வெறும் நோக்க வெளிப்பாடுகளாக மட்டுமே உள்ளதாகக் சுட்டிக்காட்டிய டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் மாங்கர் (Mark Manger), இது தொடர்பில் இன்னும் உறுதியான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார வாய்ப்புகள் மற்றும் பிராந்தியக் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கனேடிய மத்திய அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிப் பழகிவரும் வேளையில், ‘இணைப்பு உறுப்பினர்’ (associate member) போன்ற வெறும் பெயரளவிலான அடையாள விவாதங்களில் கவனம் செலுத்துவதைவிட, உறுதியான மற்றும் தெளிவான சட்ட ஒப்பந்தங்களை எட்டுவதே கனடாவுக்கு நீண்டகால அடிப்படையில் பயனளிக்கும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.











