இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணியும் ஜனநாயக உரிமைகளுக்காக நீண்டகாலம் குரல் கொடுத்தவரும், தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான லால் விஜேநாயக்கவின் மறைவுக்கு ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனநாயகம், மனித உரிமைகள், நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவு கூரப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டு ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக லால் விஜேநாயக்க விளங்கினார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஜனநாயக விழுமியங்களையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் அவர் உறுதியுடன் செயற்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் சட்டத்துறை மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படும் என்றும் ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.











