பருவமழை காலத்தில் கடந்த காலங்களைப் போன்று காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், இம்மாதம் சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் கப்பல் சேவை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையில் கப்பல் சேவையில் ஈடுபடும் “சுபம் ஃபெர்ரி” (Subham Ferry) கப்பல் நிறுவனத்தினர் காங்கேசன்துறையில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இத்தகவலைத் தெரிவித்தனர்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், “காங்கேசனத்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் கப்பல் சேவையை முன்னெடுத்து வருகின்றோம்.
இம்முறை பருவமழை ஆரம்பித்தாலும், கடந்த காலங்களைப் போன்று சேவைகளை இடைநிறுத்தாது தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.
எமது கப்பல் சேவை ஊடாக நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்க முடியும்.
இந்தியாவில் இருந்து பெருமளவானோர் பொருட்களை எடுத்து வருவதால், பொருட்களின் நிறை அதிகரிப்பு காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கையை 110 பேராக மட்டுப்படுத்தியுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருமளவில் இந்தியாவிற்கு பொருட்கள் எடுத்து செல்லப்படாததால், இங்கிருந்து 150 பயணிகள் பயணிக்க முடியும்” எனக் குறிப்பிட்டனர்.
தற்போது ஒவ்வொரு பயணியும் தம்முடன் 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்ல முடியும்.
30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு, 5 கிலோ வரையில் 5,250 ரூபாயும், 10 கிலோ வரையில் 8,750 ரூபாயும், 30 கிலோ வரையில் 21,000 ரூபாய் வரையிலும் அறவிடப்படும்.
அத்துடன் கப்பல் போக்குவரத்திற்கான ஒருவழி கட்டணமாகப் பெரியவர்களுக்கு 19,250 ரூபாயும், சிறுவர்களுக்கு 17,500 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பெரியவர்களுக்கான ஒருவழி கட்டணமாக 21,000 ரூபாய் அறவிடப்பட்டது.
இந்தியா செல்வதற்கான விசா ஏற்பாடுகளைத் தமது நிறுவனமே அதற்குரிய கட்டணங்களைப் பெற்றுச் செய்து தரும் என்றும், எனவே இம்மாதம் சிறப்பு சலுகைகளுடன் முன்னெடுக்கப்படும் கப்பல் சேவைகளுக்கு முற்பதிவுகளைச் செய்து கொள்ள முடியும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.











