அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்த கடுமையான தோல்விக்கு இரான் மீதான போரும், அதனால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வும் ஒரு முக்கிய காரணம் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், தனது நடவடிக்கை முற்றிலும் சரியானது என்றும், அந்த முடிவில் தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும், இரான் போர் நடவடிக்கைகளுக்கும் எதிரான மக்களின் வெளிப்படையான எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
இரான் விவகாரத்தில் தான் எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டாலும், எரிபொருள் விலை உயர்வு போன்ற குறுகிய காலச் சிக்கல்களை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பதைத் தான் புரிந்து கொண்டுள்ளதாகவும், ஆனால் அந்த நிலைப்பாட்டுடன் தான் உடன்படவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
தேர்தல் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்க மறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தேர்தலில் தாம் நேரடியாகப் போட்டியிடாதமையே, குடியரசுக் கட்சியினரால் வாக்காளர்களை முழுமையாகத் திரட்ட முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்றார்.
மேலும், தாம் பல பேரணிகளில் கலந்துகொண்டு ஆதரித்த சில தோல்வியடைந்த வேட்பாளர்களையே அவர் குறைகூறியுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.











